கோவை
ஆயுதபூஜையில் துப்பாக்கி, கத்தி வைத்து வழிபாடு செய்து, அர்ஜூன் சம்பத்தால் முகநூலில் வெளியிட்ட படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அர்ஜுன்சம்பத் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத். கோவையை சேர்ந்த இவர், ஆயுத பூஜையை யொட்டி 2 துப்பாக்கிகள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை கோவையில் உள்ள தனது வீட்டில் வைத்து ஆயுத பூஜை நடத்தினார். இதுதொடர்பான படம் அவரது முகநூலில் வெளியிடப்பட்டது. இதற்கு மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அர்ஜுன் சம்பத், “என் மகன் துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியில் சேர்ந்து (ரைபிள் கிளப்) பயிற்சி பெற்று வருகிறான். அந்த பயிற்சிக்கு பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜை நடைபெற்றது. ஆயுதபூஜை கொண்டாடுவது என் உரிமை. இந்த படம் வெளியான அரை மணிநேரத்துக்குள் சிலர் வேண்டும் என்றே பெரிதுபடுத்தி பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாட கூடாது என்று சில அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. ஆயுத பூஜை என்பது தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம். என்னையும், இந்து அமைப்புகளையும் தவறாக சித்தரிப்பதற்காக இதுபோன்ற பிரச்சினையை கிளப்பி காவல்துறையில் புகார் செய்கிறார்கள். தேவைப்பட்டால் நானும் காவல்துறையில் புகார் செய்வேன்”. என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜை நடத்திய அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம், சென்னை நகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். ஆனால், இது தொடர்பாக கோவையில் யாரும் காவல்துறையிடம் புகார் செய்யவில்லை.
இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கோவை நகர காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
