Asianet News TamilAsianet News Tamil

இரட்டைமடி வலைகளுக்கு தீ வைத்த மீனவர்கள் மீது காவலாளர்கள் வழக்கு பதிவு...

Guards registered case against fishermen who set fire to double nets
Guards registered case against fishermen who set fire to double nets
Author
First Published Mar 7, 2018, 12:58 PM IST


இராமநாதபுரம்

 

இராமநாதபுரத்தில், மண்டபம் கடற்கரையில் இரட்டைமடி வலைகளுக்கு தீ வைத்த மீனவர்கள் மீது காவலாளர்கள் வழக்கு பதிந்தனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

 

மீன்துறையின் அனுமதி பெற்று விசைப்படகுகள் தொழில் செய்து வரும் நிலையில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் மீனவர்கள் மீன்வளத்தை அழிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி வருவதாக மண்டபம் பாரம்பரிய மீனவர் நலச்சங்கம் சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேரில் சென்று மீன்துறை உதவி இயக்குனரிடம் புகார் செய்தனர்.

 

மேலும், இரட்டைமடி மூலம் மீன்பிடிப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

இதற்கிடையே மண்டபம் தீபகற்ப மீனவர் சங்க தலைவர் அடைக்கலம், பாரம்பரிய மீனவர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களை தாக்கி மிரட்டி வருவதாக கூறி மண்டபம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 

இவ்வாறு இரு தரப்பினரிடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மண்டபம் கடற்கரை ஜெட்டி பகுதியில் இரவில் 2 பேர் இரட்டைமடி வலைக்கு தீ வைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

 

அப்போது அவர்களது செல்போன் அங்கேயே தவறி விழுந்து விட்டது. அந்த வழியாக சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்த மண்டபம் கடற்கரை காவலாளர்கள் தீ எரிவதை பார்த்து அங்கு சென்றனர்.

 

அப்போது வலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதை அறிந்து உடனடியாக தீயை அணைத்தனர். இந்த நிலையில் காவலாளர்கள் தீவைப்பு பற்றி விசாரித்து கொண்டு இருக்கும்போது, அங்கு செல்போனை தேடி மீனவர்கள் 2 பேர் வந்தனர்.

 

அவர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகமடைந்த காவலாளர்கள் அவர்களை மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

அதைத்தொடர்ந்து இராமேசுவரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் அங்கு வந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார்.

 

இந்தநிலையில் மண்டபம் பாரம்பரிய மீனவர் நலச்சங்க நிர்வாகிகள் மண்டபம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் வேற நபர்கள் வலைகளுக்கு தீ வைத்துவிட்டு, எங்கள் மீது பழி சுமத்த முயன்றனர். ஆனால் இதில் தொடர்புடையவர்களை காவலாளர்கள் உடனடியாக பிடித்து வழக்கு பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

 

இதன்மூலம் மண்டபம் மீனவர்கள் இடையே மோதல் சம்பவம் நடைபெறாமல் காவலாளர்கள் தடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios