Greivence for police
போலீசார் அனைவரும் இணைந்து சங்கம் ஒன்று தொடங்கப்போவதாக தகவல் பரவியதையடுத்து, அவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது. இந்த முகவரியில் போலீசார் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலீசார் சங்கம் அமைக்கப் போவதாக முகநூல் ,வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக சென்னையில், பல்வேறு அமைப்புகளின் பெயரில் உயர் போலீஸ் அதிகாரிகளே போஸ்டர் அடித்து ஒட்டியதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால் உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஜுலை 6 ஆம் தேதி போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாகவும், அப்போது தங்கள் கோரிக்கைகள் குறித்து அவரிடம் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது.
இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட 50 கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட சிலரை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் எங்கு செல்கிறார்கள், பணியின்போது யார், யாரை சந்திக்கிறார்கள் , பொது மக்கள் யாரையாவது சந்திக்கிறார்களா? போன்ற விவரங்களை சேகரிக்கவும் டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்..

இந்நிலையில் போலீசார் தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி அளிக்கப்பட்டுள்ளது .tnpolicewelfare@gmail.comஎன்ற ஈமெயில் முகவரியில், போலீசார் குறைகளை தெரிவிக்கலாம். பணிமாறுதல், தண்டனை பட்டியல் தவிர்த்து மற்ற குறைகளை தெரிவிக்கலாம் என காவல் துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த சுற்றறிக்கையை தகவல் பலகையில் காவலர்களின் பார்வைக்காக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
