கிராம நத்தம் பட்டா பதிவு திடீர் நிறுத்தம்.. பத்திரப்பதிவு அதிகாரிகள் என்ன சொல்கின்றனர்?
இந்த அலுவலகங்களில் வீடு, மனையிடம், காலியிடம், நன்செய்,புன்செய் உள்ளிட்ட அனைத்துப்பதிவுகள், வணிக ரீதியான மற்றும் திருமணம், வர்த்தகம், சங்கம் உள்ளிட்ட பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன
பத்திரப்பதிவு அலுவலகங்களில், கிராம நத்தம் பட்டா பதிவுடைய மனையிடம், வீடு, காலி இடம் போன்றவற்றை பதிவு செய்ய முடியாமல் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சொத்துக்களை விற்க முடியாமலும், புதிய சொத்துக்களை வாங்க முடியாமலும், வீட்டுக்கடன் பெறமுடியாமலும், மக்கள் தவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில், 16 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் வீடு, மனையிடம், காலியிடம், நன்செய்,புன்செய் உள்ளிட்ட அனைத்துப்பதிவுகள், வணிக ரீதியான மற்றும் திருமணம், வர்த்தகம், சங்கம் உள்ளிட்ட பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பதிவுகளில், கிராம நத்தம் பட்டா மட்டும் பதிவு செய்ய முடியாதபடி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வகை வகை பட்டாக்கள், அரசு புறம்போக்கு நிலங்களாக கருதப்படுவதாலும், பல நுாற்றாண்டுகளாக மக்கள் வாழும் பகுதிகளாக இருந்ததாலும், அவற்றை அனுபவ ஸ்வாதீன இடங்களாக கருதி, 1991ல் நத்தம் பட்டாவாக அளவீடு செய்து, அப்போதைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதனால் அவற்றை கணக்கீடு செய்து, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்காக கடந்த நான்கு மாத காலமாக, கிராம நத்தம் பட்டா பதிவுகளை பத்திரப்பதிவுத்துறை நிறுத்தி வைத்துள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.. எந்தெந்த இடங்களில்? வானிலை மையம் தகவல்
ஆனால் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கிராம நத்த நிலங்களை பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என்று கூறியிருந்தார். எனினும் கோவையில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்களில் கிராம நத்தம் நிலங்கள், வீட்டு மனை நிலங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.
கோவை மண்டல பத்திரப்பதிவு துணை தலைவர் ஸ்வாமிநாதன் இதுகுறித்து பேசிய போது “ கிராம நத்தம் நிலங்களை பதிவு செய்யும் பணி நிறுத்தப்படவில்லை. அறநிலையத்துறை உள்ளிட்ட அரசு சார்ந்த நிலங்களை வருவாய்த்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். அதில் கிராம நத்தம் நிலங்களும் பதிவு செய்யப்படுகின்றன. எனவே கிராம நத்த நிலங்களில் பெரும்பாலானவை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்படியே பதிவு செய்யவில்லை என்றாலும், அதுகுறித்து தகவல் தெரிவித்தால், விசாரணை மேற்கொண்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.