குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வருவாய் ஆய்வாளரை கொலை செய்து, உடலை முட்புதரில் வீசிச்சென்ற வாரப்பத்திரிகை நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
சென்னை, ஜி.கே.எம்.காலனி, சத்யவாணி முதல் தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 53). சென்னை, மந்தைவெளியில் உள்ள குடிசைமாற்று வாரியத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு அன்னசெல்வி (46) என்ற மனைவியும், சிவசங்கரன் மற்றும் அருண் ஆகிய 2 மகன்களும் ,சிவசங்கரனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மணிமாறன் குடிசை மாற்று வாரிய தொழிற்சங்கத்திலும் பொறுப்பில் உள்ளார்.

கடந்த 27ம் தேதியன்று இரவு, மணிமாறன் வெளியில் நண்பரை சந்தித்து விட்டு வருவதாக சென்றவர் மறுநாள் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அன்னசெல்வி கடந்த 29 ஆம் தேதி பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தில் கணவரை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் தனிப்படை போலீசார் காணாமல் போன மணிமாறனை தேடி வந்தனர். அவர் கடைசியாக பேசிய நபர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். கடைசியாக மணிமாறன் தனது செல்போனிலிருந்து ராயபுரத்தை சேர்ந்த மகேஷ் (40)என்பவரிடம் பேசியது தெரியவந்தது.
இதில் மணிமாறனிடம் கடைசியாக பேசிய ராயபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில் அவரை விசாரணை செய்தபோது, மகேஷ் அவரது நண்பர்கள் 4 பேருடன் அசேர்ந்து மணிமாறனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மகேஷ், மாதமிரு முறை வெளியாகும் ‘’ மக்களின் கேள்விகள் ” என்ற பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வருவதாகவும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கித் தருவதாக மணிமாறன் பல லட்சம் பணம் தன்னிடம் வாங்கியதாகவும், பலபேரிடம் மணிமாறனின் வாக்குறுதியை நம்பி ஆனால் மணிமாறன் கூறியதுபோல் வீடுகள் ஒதுக்கித் தராமல் ஏமாற்றி வந்ததாகவும், இதனால் மணிமாறனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் மகேஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தனது கூட்டாளிகள் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சூரி (எ) சூரியபிரகாஷ்(37), ஜெய், ராஜேஷ் மற்றும் முத்து ஆகியோருடன் சேர்ந்து கடந்த 27ம் தேதியன்று மணிறனிடம் நைசாக பேசி, பெரம்பூர் வரவழைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கால்டாக்சி மூலம் மணிமாறனை கடத்திச் சென்று இரும்பு ராடால் மணிமாறனை தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை காஞ்சிபுரம் மணிமங்கலம் பகுதியில் ஒரு முட்புதரில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து மகேஷ் சொன்ன இடத்துக்கு போலீசார், மகேஷை அழைத்து சென்று மணிமாறனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதனையடுத்து போலீசார் மணிமாறன் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி மகேஷ் (40), மற்றும் அவரது கூட்டாளி எண்ணூர் சூரி (எ) சூரியபிரகாஷ் (37) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
