தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் தற்காலிக நர்சுகளுக்கான ஊதியத்தை 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் , செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிய தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு ஆரம்பத்தில் மாத ஊதியமாக ரூ.7,700 வழங்கப்படுகிறது.

இந்த தற்காலிக நர்சுகள் நிரந்தர நர்ஸ்கள்  பணியிடங்கள் காலியாகும் பொழுது இக்காலிப்பணியிடங்களில் நிரந்தர செவிலியர்களாக பணிநிரந்தரம் செய்யப்படுகிறார்கள். தற்காலிக செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தும் இந்தமுறை இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பின்பற்றப்படுகிறது.

நிரந்தமாக்கப்பட்ட செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்படும் பொழுது குறைந்தபட்சம் ரூ.36,000 ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது தற்காலிக செவிலியர்கள் நிரந்தரமாக்கப்படும் வரை ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியம் பெற்று வந்தனர்.

இத்தற்காலிக செவிலியர்களின் பணிகளையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு அவர்களின் ஊதியத்தை உயர்த்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு தற்காலிக செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பூதியத்தை ரூ.7,700லிருந்து ரூ.14,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர்  ஆணை வெளியிட்டார்.

இந்த ஊதிய உயர்வு முன் தேதியிட்டு 01.04.2018 முதல் வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.500 ஊதிய உயர்வும் அளிக்கப்படும். இது தவிர தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டங்களுக்கான தொகையும் செலுத்தப்படும். இதன் மூலம் தொகுப்பூதியம் பெறும் 12,000 செவிலியர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.