புதிய மாநகராட்சிகள் மசோதா உள்பட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக 4 மசோதாக்கள் அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தச் சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளன.

Governor RN Ravi approved 4 bills including the new Municipal Corporations Bill sgb

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய மாநகராட்சிகளை உருவாக்க வருவாய் மற்றும் மக்கள் தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்டுள்ளார்.

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்காக, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள் தொகை, வருமான அளவுகளை குறைப்பதற்கு வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின்படி நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும்போது சொத்துக்களை மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில், தனியார் வளாகம் கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர்ப்பாதையில் வெளியேற்றுவதற்காக இணைப்பு பெறுவதை கட்டாயமாக்குவதற்காக சென்னை குடிநீர் வாரிய விதிகளில் திருத்தம் செய்யும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாநகர காவல் சட்டத்தை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு மசோதாக்களும் சென்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக இந்த மசோதாக்கள் அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தச் சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios