செந்தில் பாலாஜி இலாக்காக்கள் மாற்றம்: பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு? - என்ன காரணம்?

செந்தில் பாலாஜி வசமிருந்த அமைச்சரவை இலாக்காக்களை மாற்றம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Governor denies the proposal of TN govt to allocate the portfolios of Senthil Balaji sources

தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. அவர் ஜாமீன் கோரிய மற்றும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மீதான உத்தரவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை பிறப்பிக்கும் என தெரிகிறது.

முன்னதாக, செந்தில் பாலாஜி கைது குறித்து சட்ட வல்லுநர்களோடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மூத்த அமைச்சர்களோடும் அவர் ஆலோசனை நடத்தினார். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவரது இலாக்காக்களை பிரித்து கொடுக்க திட்டமிடப்பட்டது. இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத்துறையை கூடுதலாகவும்,  அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கூடுதல் பொறுப்பாகவும் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி வசமிருந்த அமைச்சரவை இலாக்காக்களை மாற்றம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலாக்கா மாற்றத்துக்கு காரணமாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை தமிழக அரசு சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால், உடல்நிலை சரியில்லை என்பது தவறான காரணம் என கூறி இலாக்கா மாற்றத்தை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு மற்றும் டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகத்தான் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்துள்ளது.

காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி: உயர் நீதிமன்றம் அனுமதி!

முன்னதாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் சுதந்திரமான விசாரணை நடக்க வாய்ப்பில்லை. எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்வருக்கு அறிவுறுத்த வேண்டும். இதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்திருந்தார். 

இந்த மனுவில் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை நடத்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த கடிதத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதால் மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவரை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. அதை நீங்கள் குறிப்பிடாததால் உங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios