காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி: உயர் நீதிமன்றம் அனுமதி!
காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, சென்னை காவேரி மருத்துவனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும். ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இதுதொடர்பான முறையீட்டின்படி, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்திய சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி, வருகிற 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அத்துடன், அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையும் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்; தங்கம் தென்னரசு, முத்துச்சாமிக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு!
மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்றம், ‘நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில்தான் இருக்க வேண்டும் என்கிற வாதத்தை ஏற்க முடியாது என கூறியதுடன், செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருப்பார். அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் செந்தில் பாலாஜி உடல் நிலையை கண்காணிக்கலாம்’ என ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆட்கொணர்வு மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. சட்டவிரோத கைது தொடர்பான முக்கிய மனு, பின்னர் விசாரிக்கப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால், காவல் விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை மனுவை கருத்தில் கொண்டு, சிகிச்சையில் இருக்கும் நாட்களை கணக்கில் கொள்ளக்கூடாது எனவும், காவேரி மருத்துவமனை செலவுகளை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்ற காவல் தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், ஜாமீனுக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.