சேலம் 

சேலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் முழுமையாக  செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ரோகிணி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

இந்தக் கூட்டத்தில், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த மனுவில், "சேலம் மாநகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்பட வேண்டும். 

குறிப்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளப்பட்டி சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரிவர கவனிக்காததால் ஒரு பெண்ணுக்கு முறையாக வளர்ச்சியின்றி பிறந்த குழந்தை இறந்தது. இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, சின்ன சீரகாபாடியை சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், "எங்கள் பகுதியில் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.