கோயம்புத்தூர்
 
பிளஸ்-1 வகுப்பில் கலைப் பிரிவுக்கும் ஆங்கில வழிக் கல்வி வேண்டும் என்று அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆட்சியரிடம் நேரில் வந்து மனு கொடுத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு ஆட்சியர் ஹரிகரன் தலைமை தாங்கினார். 

இதில் வீட்டுமனை பட்டா, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் செய்து தரக்கோரி மக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, கோயம்புத்தூர் வெள்ளலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளி சீருடையில் தங்கள் பெற்றோருடன் வந்து மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், "வெள்ளலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி நடைமுறையில் உள்ளது. இந்தக் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 படிப்புக்கு முதல் மூன்று பாடப் பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்து அதை ஆங்கில வழி கல்வியாக மாற்றிக் கொள்ளலாம் என்று கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. 

எனவே, முதல் பாடப்பிரிவான கணிதத்தை ஆங்கில வழிக்கல்வியாக மாற்ற பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபோல கலைப் பிரிவுக்கும் ஆங்கில வழி கல்வி வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில், பொள்ளாச்சி தாலுகா ஆத்துப்பொள்ளாச்சியை அடுத்த மணக்கடவு பகுதியை சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் மேள தாளத்துடன், நடனம் ஆடியபடி வந்து மனு அளித்தனர். 

அதில், "மணக்கடவு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கேரள எல்லைப்பகுதியில் இருந்து மணக்கடவு செல்லும் வழியில் உள்ள விநாயகர் கோவில் கீழ்புறத்தில் ஆற்றுக்கு செல்ல பொதுவழி உள்ளது. இந்த ஆற்றின் அருகே மயானம் உள்ளது. 

இதனருகே உள்ள தனியார் நில உரிமையாளர், மயானத்திற்கு செல்லும் பொதுவழியை கம்பி வேலி அமைத்து தடுத்து உள்ளார். இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. 

எனவே, தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்ல பாதை ஏற்படுத்தி தரவேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.