குழந்தை பிறந்து சில மணிநேரத்தில் பெண் இறந்தார். இதனால் உறவினர்கள், டாக்டரின் தவறான சிகிச்சையால் பலியானார் என கூறி, முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஆங்கூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜோதி நிறைமாத கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் ஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக உறவினர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு, ஆண் குழந்தை பிறந்தது. மாலையில் ஜோதிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஜோதியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையை இங்க்பெட்டர் பெட்டியில் வைத்து பராமரித்தனர். நேற்று இரவு ஜோதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதை அறிந்ததும் அவரது உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு, டாக்டர்களின் தவறான சிகிச்சையால் ஜோதி இறந்தார் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், நள்ளிரவில் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்து, மருத்துவமனை நிர்வாகம் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால், சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள், மருத்துவர்களின் அஜாக்கிரதை மற்றும் தவறான சிகிச்சையால் ஜோதி இறந்தார். சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதையொட்டி அங்கு மீண்டும் பரபரப்பு நிலவியது.
இதை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் குணசேகர், செங்கலபட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் லாமேக் ஆகியோர் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
