சென்னை விமான நிலையத்தில், மலேசியா நாட்டு பயணிகள் 3 பேரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம், அமெரிக்க கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணகிளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது, மலேசியா நாட்டை சேர்ந்த முகமது மஸ்தான் (29), பிரம்மஷா (28) ஆகியோர், சுற்றுலா பயணியாக துபாய் சென்றுவிட்டு, அங்கிருந்து சென்னை வந்தனர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள், அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள், 2 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாகமாக சோதனை நடத்தினர். 

அதில், அவர்களது உள்ளாடை மற்றும் ஆசனவாயிலில் 556 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 18 லட்சம் தொடர்ந்து அவர்களை பிடித்து வைத்து, விசாரிக்கின்றனர். முன்னதாக சென்னையில் இருந்து கோலாம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்தவர்களை, அதிகரிகள் சோதனை செய்து அனுப்பினர்.

 

மலேசிய நாட்டை சேர்ந்த முகமது இஸ்கான் (52) என்பவர், சென்னைக்கு சுற்றுலா பயணியாக வந்துவிட்டு, மீண்டும் மலேசியா செல்ல இருந்தார். அவரது கைப்பையை சோதனை செய்தபோது, கட்டு கட்டாக அமெரிக்க கரன்சி இருப்பது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.7 லட்சம். அவரை பிடித்து விசாரிக்கின்றனர். ஒரே நாளில் சுற்றுலா பயணியாக வந்த மலேசியா நாட்டினர் 3 பேரிடம் தங்கம், அமெரிக்க கரன்சிகள் பறிமுதல் செய்தது, சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.