லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ரஷ்ய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோவை, மறு பரிசோதனை செய்தபோது, அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால், அவரது பதக்கம் பறிக்கப்படுகிறது.

கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோ பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

ரஷ்ய வீராங்கனைகள் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தாத்யானா லைசென்கோவிடம் அப்போது எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த சிறுநீர் மாதிரி மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், தாத்யானா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராக அழைத்தும் அவர் மறுத்து விட்டார். இதனால் அவரது தங்கப்பதக்கத்தை பறிக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 
33 வயதான தாத்யானா லைசென்கோ 2011 மற்றும் 2013ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கியதால் 2007 முதல் 2009ம் ஆண்டு வரை தாத்யானா போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் அவர் கடந்த 2008ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. ரஷ்ய தடகள அணிக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டதால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. தாத்யானா லைசென்கோ 2வது முறையாக ஊக்க மருந்து சோதனையில் சிக்கி இருப்பதால் அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தாத்யானா தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற போலந்து வீராங்கனை அனிடா வோடார்சிக்கு தங்கப்பதக்கமும், வெண்கலப்பதக்கம் வென்ற ஜெர்மனி வீராங்கனை பிட்டி ஹெய்ட்லெருக்கு வெள்ளிப்பதக்கமும், 4வது இடம் பிடித்த சீன வீராங்கனை சாங் வென்சிக்கு வெண்கலப்பதக்கமும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.