கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி குறித்து தகுதியுள்ள நபரின் பட்டியலை தயாரிக்கும் பணிக்கு துணைப் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை இந்த குழு தயாரித்து கூட்டுறவு சங்ககளுக்கு வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 21-ம் தேதி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுள்ள நபர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணிக்கு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழு தகுதியுள்ளவர்களின் பட்டியலை தயாரிக்கும் என்றும், துணைப் பதிவாளர் தலைமையில் இந்தக் குழு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, நகைக்கடன் பெறத் தகுதி வாய்ந்த மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயாரித்து, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தக் குழு தயாரிக்கும் பட்டியல் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நகைக் கடன் நிராகரிப்பு சான்று தேர்தல் முடிந்த பின்னர் வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் படி யாரெல்லாம் நகைக் கடன் பெறத் தகுதியுள்ளவர்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையில் வழங்கப்பட்டுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொது நகைக்கடன்கள் பெற்றிருந்து அவர்களின் மொத்த நகைக் கடன்களின் மொத்த எடை 40 கிராம் வரை அதாவது 5 பவுன் வரை இருந்தால் இதர தகுதிகளுக்குட்பட்டு அவர்களின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்ப அட்டையில் இடம்பெற்ற குடும்பத்தினர் 31.3.2021ஆம் நாள் வரை 5 பவுனுக்கு (40 கிராம்) மிகாமல் உள்ள நகைகளுக்கு ஈடாகப் பெற்ற மொத்த நகைக் கடன்களில் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள தொகையைப் பகுதியாகச் செலுத்தியது நீங்கலாக, மீதம் உள்ள பொது நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
பொது நகைக் கடன்கள் பெறுவதற்கு இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்ட 31.3.2021 வரை தகுதி பெற்ற கடன்தாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்ற நகைக் கடன்களின் கணக்கில் அவர்கள் பகுதியாக செலுத்தியிருப்பின் அவ்வாறு பகுதியாகச் செலுத்திய நிலுவைத்தொகை நீங்கலாக மீதம் நிலுவையில் இருந்த தொகை (அசல்- வட்டி- அபராத வட்டி, இதர செலவீனங்கள் ஏதேனும் இருப்பின்) மட்டும் தள்ளுபடிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
31.3.2021ஆம் தேதியில் தகுதி பெற்ற கடன்தாரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்களின் கணக்கில் நிலுவை இருந்து அதன் பின்னர் அரசாணை வெளியிடப்படும் நாள் வரை கடன் நிலுவைத்தொகை பகுதியாகச் செலுத்தப்பட்டிருந்தால் அவ்வாறு செலுத்தப்பட்ட தொகை நீங்கலாக எஞ்சிய கடன் நிலுவைத்தொகை மட்டுமே தள்ளுபடியில் இடம்பெற வேண்டும்.
தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதார் எண் விவரங்களைச் சரியாக அளித்தவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும்.மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும்.
தமிழக அரசின் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நகைக் கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள். தற்போது வரை செல்லுபடி ஆகக்கூடிய குடும்ப அட்டை வைத்துள்ள நகைக் கடன்தாரர்கள் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
