ஈரோட்டில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு சிகிச்சை எடுத்த கல்லூரி மாணவி மர்மமாக உயிரிழந்தார்.இதையடுத்து, அந்த மாணவியின் பெற்றோர்கள் மருத்துவமனை மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சேலத்தில் உள்ள பாலகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருபவர் பாக்யஷ்ரி(வயது17). இவர் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக ஈரோட்டில்உள்ள ஹெர்போகேர் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தார். ஆனால், திடீரென மர்மமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை சக்தி நிருபர்களிடம் கூறியதாவது-

ஆயுர்வேத மருத்துவமனையின் நிறுவனர் நவீன் பாலாஜி எனது மகளின்உடல் எடையை குறைத்துவிட முடியும் என்று கூறி சிகிச்சைஅளித்தார். கடந்த மாதம் சிகிச்சைக்காக எனது மகளை அழைத்து வந்து 9 நாட்கள் சிகிச்சை எடுத்தோம். அதன்பின், இம்மாதம் 2-ந்தேதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, சில மருந்துகளைக் கொடுத்து தொடர்ந்து சாப்பிடக்கூறி எனது மகளிடம் டாக்டர் நவீன் பாலாஜி தெரிவித்தார்.

எனது மகளுக்கு உடல் எடையும்,ஆஸ்துமா மட்டுமே இருந்தது. மற்றவகையில் எந்த நோயும் இல்லை என்பதால், கல்லூரியில் மற்ற மாணவிகள் போல் படித்து வந்தாள். மருத்துவமனையில் இருந்து கொடுத்த மருந்துகளை சாப்பிட்ட 2 நாட்களில் எனது மகள் 3 வயது குழந்தையைப் போல் நடந்து கொள்ளத் தொடங்கினாள்.

அதன்பின், ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அந்த மருத்துவமனை நிர்வாகம், எங்கு சிகிச்சை எடுத்தீர்களோ அங்கு கொண்டு செல்லுங்கள் என்றனர். இதையடுத்து, ஹெர்போகேர் மருத்துவமனைக்கே எனது மகளை கொண்டு சென்றேன்.அங்கு அளிக்கப்பட்ட சிகிச்ைசயில் தொடர்ந்து 4 நாட்கள் எனது மகள் சுயநினைவு இன்றி கிடந்தார்.

வியாழக்கிழமை அதிகாலை நானும், எனது மனைவியும் திருமணத்துக்கு செல்ல வேண்டிஇருக்கிறோம், என மருத்துவர் நவீன் பாலாஜியிடம் கூறினோம். அதற்கு அவர் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் செல்லுங்கள் சென்றார். திருமணத்துக்கு சென்றபோதிலும் ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கு ஒரு முறையும் தொலைபேசியில் மகளின் உடல்நிலையை கேட்டுக்கொண்டே இருந்தேன். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் நன்றாக இருக்கிறார் என்றனர்.

இதற்கிடையே புதன்கிழமை இரவில் இருந்தே பாக்யாவின் உடல் நிலை மோசமாகத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் பெற்றோர்களுக்குத் தெரியாமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிக்சை பலன்அளிக்காமல் பாக்யா இறந்துவிட்டதாகக்கூறப்படுகிறது.

வியாழக்கிழமை காலை 9மணிக்கு பாக்யாவின் பெற்றோர்கள் போனில் கேட்டபோது, பாக்யா சூப் சாப்பிடுகிறாள் என்று தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட பாக்யாவின் பெற்றோர்கள், மகளின் உடல்நிலையில் முன்னேற்றம் தென்பட்டுள்ளது, ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்குகொண்டு செல்வோம் என்று நம்பி, மாலை ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், மாலையில், ஆம்புலன்ஸ் வந்தவுடன், பாக்யாவின் சடலத்தையே மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ளது.

இதைப்பார்த்த பாக்யாவின் பெற்றோர்கள் கண்ணீர் விட்டுகதறி அழுதனர். இதையடுத்து மருத்துவரிடம் பாக்யாவின் பெற்றோர்கள் விளக்கம் கேட்டபோது, நீங்கள் திருமணத்தில் இருந்தபோது தொந்தரவு செய்யக்கூடாது என்பதால், தகவல் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கவுந்தபாடி போலீஸ் நிலையத்தில் மருத்துவர் நவீன் பாலாஜி, மருத்துவமனை மீது பாக்யாவின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பின், பாக்யாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.ஐ.பி.சி. 174 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.