நீலகிரி

உதகையில் பெய்த கன மழையால் தமிழக - கேரள சாலையில் இராட்சத பாறைகள், மரங்கள் சரிந்து விழுந்தன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம், உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் நேற்று கன மழை பெய்து வெளுத்து வாங்கியது. இதனால், தமிழக - கேரள எல்லைப் பகுதியான கீழ்நாடுகாணி பகுதியில் இராட்சத பாறைகள், மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தன.

சாலையில் விழுந்த இராட்சத பாறைகளால் வாகனங்கள் சாலையைக் கடக்க முடியாமல் ஆங்காங்கே நின்றுவிட்டன. மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த சாலை மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், சாலையில் விழுந்த பாறைகள், மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கேரளத்தில் இருந்து உதகை, கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா வந்த பயணிகள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதேபோல, கக்குச்சி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் இங்கும் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

இதன் விளைவாக உதகையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.