கௌதமி பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: நாராயணன் திருப்பதி விளக்கம்!

கௌதமி பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார்

Gautami Tadimalla issue has nothing to do with BJP Narayanan Thirupathy explains smp

பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கெளதமி அறிவித்துள்ளார். கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ள அவர், தனது விலகல் தொடர்பான கடிதத்தில் சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து சொத்து, பணம், உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாகவும், அவருக்கு பாஜவின் மூத்த நிர்வாகிகள் சிலர் துணையாக இருப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் கெளதமி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், கௌதமி பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கௌதமி ஒரு சிறந்த திரைப்பட கலைஞர். அமைதியானவர். பண்பானவர். நல்லவர். தன்னை அழகப்பன் என்ற ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து போய் வேதனையுடன் பாஜக விலிருந்து ராஜினாமா செய்வதாக  குறிப்பிட்டிருக்கிறார். 20 வருடங்களாக அழகப்பனை தனக்கு தெரியும் என்றும், தானாகவே அவரிடம் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அளித்ததாக கூறி விட்டு, இந்த விவகாரத்தில் பாஜக தனக்கு உதவவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது முரண். அந்த நபர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில், அவருடைய தனிப்பட்ட விவகாரத்தில் எப்படி கட்சி தலையிட முடியும்? மேலும் சில மூத்த தலைவர்கள் அழகப்பனுக்கு உதவி புரிவதாக சொல்வதும் முறையல்ல என எண்ணுகிறேன். அப்படி யாராவது உண்மைக்கு எதிராக துணை நிற்பதாக கௌதமி நிரூபித்தால், நான் அவருக்கு பக்கபலமாக இருந்து குரல் கொடுக்க தயார்.

 

 

கௌதமி நீண்ட நாட்களாக கட்சியில் உள்ளார், அவர் மூலம் தான் அழகப்பனுக்கு பாஜகவில் உள்ள சிலருக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படியானால், அவர் எப்படி மற்றவர்களை குற்றம் சொல்ல முடியும் என்று புரியவில்லை. ஒரு வேளை, யாரேனும் கௌதமி ஏமாற்றப்பட்டது தெரிந்து அவருக்கு எதிராக செயல்பட்டதாக ஆதாரம் இருந்தால், வெளிப்படையாக கட்சியின் தலைவர்களிடம் கூறியிருக்கலாம். மேலும் ராஜபாளையம் தொகுதியில் கடைசி நிமிடத்தில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறியிருப்பது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகின்றது. கடைசி நிமிடத்தில் என்று அவர் கூறியிருப்பதிலிருந்தே, அவருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்திருந்தது என்பதையும், கூட்டணி காரணமாக அந்த தொகுதியில் போட்டியிட முடியாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் தெரிகிறது.

ஹமூன் புயலாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இந்திய வானிலை ஆய்வு மையம்!

ஆகவே, அவருடைய பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு, அவரே அவரின் பிரச்சினைகளை வரவழைத்து கொண்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அவர் தன்னை மோசடி செய்தவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். காவல் துறை விரைவாக குற்றச்சாட்டுக்கு ஆளான அழகப்பனை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கௌதமிக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய நாம் தயாராய் உள்ளோம். உணர்ச்சி வசப்பட்டு கௌதமி கட்சியிலிருந்து விலகுவதாக எடுத்துள்ள முடிவிலிருந்து பின் வாங்கினால் மகிழ்ச்சி. இல்லையேல் அது அவரின் தனிப்பட்ட தவறான முடிவு.

கௌதமி நல்லவர். ஆனால், அவர் ஏமாற்றப்பட்டது  கட்சியினாலோ, கட்சியினராலோ அல்ல. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும். அவரின் பிரச்சினைகள் விரைவில் தீரட்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios