Ganja on the home floor! Youth arrested
போதைக்கு அடிமையானதால், வீட்டு மாடியிலேயே கஞ்சா செடி வளர்த்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய இளைஞர்களே இப்படி போதை பழக்கத்துக்கு அடிமையாகி, தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த என்ஜினியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த என்ஜினியர் சார்லஸ் பிரதீப். இவர் தனது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து கஞ்சா செடி வளர்த்து வருவதாக கே.கே.நகர், போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, என்ஜினியர் பிரதீப் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டு மாடியில், நான்கரை உயரம் கொண்ட 7 கஞ்சா கெடிகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், 1.750 கிலோ கிராம் கொண்ட கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தான் கஞ்சாவிற்கு அடிமையானதால் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து அதனை உபயோகித்து வந்ததாக கூறியுள்ளார். பிரதீப்புக்கு எப்படி கஞ்சா செடி கிடைத்தது என்பது குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
