புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டிசம்பர் 15-ம் தேதி வரை ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கஜா புயலின் கோர தாண்டவத்தில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கஜா புயலால் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மாவட்டங்களில் அரசு தரப்பில் இருந்து சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

புயலால் சிலர் வீடு இடிந்து விழுந்தும், மரம் சாய்ந்தும் காயமடைந்துள்ளனர். இவர்களில் சில பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுக்கே தீண்டாடி வரும் நிலையில் உள்ள இம்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் செய்ய கட்டணம் வசூலிப்பதாகவும் சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியாகின. 

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில்  டிசம்பர் 15-ம் தேதி வரை ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.