புயல் பாதித்த 8 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த அபராதம் ஏதும் விதிக்கப்படாது எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

கஜா புயல் கடந்த வாரம் 8 மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடியது. அப்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கஜா புயல் தாக்குதலால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை மாவட்டங்களில் குடிநீர், உணவு இல்லாமல் பல ஆயிரம் மக்கள் பசி பட்டினியால் தவித்து வருகின்றனர். மின்சாரம், சாலை வசதி, மருத்துவவசதி இல்லாமல் பேரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பகுதி இருளில் மூழ்கியுள்ளது. 

மின் இணைப்பு சரி செய்ய ஊழியர்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு கிடைக்க இன்னும் கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நாகை, தஞ்சையில் விரைவில் மின் சேவை வழங்கும் நோக்கில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின்சார ஊழியர்கள் அங்கு விரைந்துள்ளனர். 

மேலும் கஜா புயல் சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மின் கம்பங்கள் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதால் மின் கம்பங்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது.

 

 இந்நிலையில் கஜா புயல் பாதித்த 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மாதம் மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.  தஞ்சை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நவம்பர் 30-ம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.