கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர் ஒருவர் கீழே இறங்கி வந்து சாப்பிடக்கூட நேரமில்லாமல் மின்கம்பத்தின் உச்சியில் அமர்ந்தே உணவருந்திய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

கஜா புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. புயலின் கடுமையான தாக்கத்தினால் 1,13,566 மின் கம்பங்கள், 1,082 மின் மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, மின்கம்பங்களை சீர் செய்யும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். 

இந்நிலையில், மின்வாரிய ஊழியர்கள் உணவு சாப்பிடக்கூட நேரமின்றி மின் கம்பத்தின் உச்சியில் அமர்ந்தபடியே ஊழியர் உணவு உண்ணுவது போன்றும், சாலைகளில் அமர்ந்து உணவு உண்ணுவது போன்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதேபோல் கொட்டும் மழை, சேறு சகதியிலும் மின்கம்பங்களை சீரமைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.  இந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.