கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். 

கஜா புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. 

புயலின் கடுமையான தாக்கத்தினால் 1,13,566 மின் கம்பங்கள், 1,082 மின் மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, மின்கம்பங்களை சீர் செய்யும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போது ஒவ்வொரு ஊர்களுக்கும் மின் இணைப்பு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. 

வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் கூட மின்கம்பங்களை தோளில் சுமந்து செல்கின்றனர். மின்கம்பங்கள் மீதும் வயல் வெளியில் ரோட்டிலேயே அமர்ந்து சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு அமைச்சர் தங்கமணி பாராட்டு தெரிவித்துள்ளார். பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு 13 லட்சம் ரூபாயும், மின் வாரியம் சார்பில் 2 லட்சம் ரூபாயும் என 15 லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது. இதில் மின்வாரியம் சார்பில் அறிவித்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை அமைச்சர் தங்கமணி நேரில் சென்று வழங்கினார்.

 

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறுகையில்;- தமிழக அரசு அறிவித்த 13 லட்சம் ரூபாய்க்கான காசோலை 2 நாட்களில் வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பால் சேதமடைந்த ஊரக பகுதிகளில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். மேலும் புயல் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு முதற்கட்டமாக மின் வாரியத்திற்கு 200 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.