Asianet News TamilAsianet News Tamil

நண்பன் இறந்ததால் ஊருக்குள் புகுந்து 15 பைக்குகள், 30 வீடுகளை அடித்து நொறுக்கிய நண்பர்கள் - இதுவா தோழமை?

Friend died other friends were attacked 15 bikes and 30 houses
Friend died other friends were attacked 15 bikes and 30 houses
Author
First Published Feb 3, 2018, 10:49 AM IST


விழுப்புரம்

விழுப்புரத்தில் நண்பன் தற்கொலை செய்துகொண்டதால் 20-க்கும் மேற்பட்ட நண்பர்கள் கிராமத்துக்குள் புகுந்து 15 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கியும், 30 வீடுகளை சூறையாடியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர் அருகே இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அவருடைய நண்பர்கள் வீடுகளை சூறையாடி, இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). ஓட்டுநரான இவர் அதேஊரை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு ஓட்டி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தேவனூர் கிராமம் வழியாக டிராக்டரை ஓட்டி சென்றபோது அந்த வழியாக வந்த ஆட்டோவும், டிராக்டரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த புலிக்கல் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ஆனந்தாயி (32) என்பவர் காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது டிராக்டர் ஓட்டுநர் மணிகண்டனிடம் இருந்து மருத்துவ செலவுக்காக ரூ.4500-ஐ அங்கிருந்தவர்கள் வாங்கினார்களாம்.  இதன்பின்னர் ஆனந்தாயியின் உறவினர்கள் டிராக்டர் உரிமையாளர் செல்வராஜை சந்தித்து நடந்த சம்பவத்தை கூறி, மருத்துவ செலவுக்கு ரூ.25 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் கொடுத்து விட்டு மீதி தொகையை பிறகு தருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து செல்வராஜ், ஓட்டுநர் மணிகண்டனிடம் உன்னால் எனக்கு பணம் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் டிராக்டர் உரிமையாளர் தன்னை திட்டியதை தனது நண்பர்களான அதேஊரை சேர்ந்த சீனிவாசன், விஜயகுமார் (21) ஆகியோரிடம் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மணிகண்டன் உள்ளிட்ட மூவரும் புலிக்கல் கிராமத்துக்கு சென்று, ஆனந்தாயின் உறவினர்களிடம், ஏன் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்கிறீர்கள்? என கேட்டு தகராறு செய்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து, ஆனந்தாயின் உறவினர் ஒருவர், விஜயகுமாரின் தந்தை ராமலிங்கத்திடம் தெரிவித்தார். இதனால் ராமலிங்கம் தனது மகன் விஜயகுமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த விஜயகுமார் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த அவரது நண்பர்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து விஜயகுமாரின் நண்பர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் இரவு புலிக்கல் கிராமத்துக்கு சென்றனர்.

பின்னர், அவர்கள் அங்கு தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி உடைத்து சேதப்படுத்தினர். மேலும, 30 வீடுகளையும் அடித்து நொறுக்கி, சூறையாடிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் ஜெயவேல் ஆகியோர் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விஜயகுமாரின் நண்பர்களான வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியதுரை (23), சீனுவாசன்(24), சுரேஷ் (28), ராஜ்குமார் (23), குமரேசன் (22) மற்றும் பாலாஜி (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர்.

இதனிடையே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடலை திருக்கோவிலூர் காவலாளார்கள் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விஜயகுமாரின் தற்கொலை சம்பவம் குறித்தும் காவலாளார்கள் விசாரனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு கிராமங்களிலும் பதற்றம் நீடிப்பதால் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், வீமராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலாளர்கள் குவிக்கப்பட்டுள்னர்.

Follow Us:
Download App:
  • android
  • ios