Free education medicine for Hindu children through revenue of temple - H Raja

திருச்சி

கோயில் மூலம் வரும் வருவாயை கொண்டு இந்து குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா தெரிவித்தார்.

திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் நிர்வாக சீர்கேட்டையும், ஆகம விதி மீறல்களையும் கண்டித்து திருவரங்கம் மீட்புகுழு சார்பில் "திருவரங்கம் காப்போம், புனிதம் மீட்போம்" என்ற பெயரில் திருச்சி மாவட்டம், மின்வாரிய அலுவலகம் அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தலைமை வகித்தார். திருவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர் முன்னிலை வகித்தார். 

இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று பேசினார். அதில், "அறநிலையத்துறையும், அரசும் கோயில்களை விட்டு வெளியேற வேண்டும். 

கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதி போன்றவை எப்படி அந்தந்த மதத் தலைவர்களிடம் உள்ளதோ அதேபோல இந்து கோயில்களையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் உடையுடன் எப்படி வந்தனர். 

பெருமாள் மீது பையை வீசியவனை பைத்தியம் என்கின்றனர். 

கோயில் சொத்துகளை மீட்டு அதனை இன்றைய சந்தை விலைக்கு வாடகைக்குவிட்டு அதன்மூலம் வரும் வருவாயை கொண்டு இந்து குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 10 பேர் கொண்ட வழிபடுவோர் குழு அமைக்க வேண்டும்" என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்பாளர் இளங்குமார் சம்பத், விசுவ இந்து பரிசத் மாநில பொருளாளர் பாண்டியன், இந்து முன்னணி கோட்டத் தலைவர் சிவக்குமார், 

வீரமுத்தரையர் சங்க நிறுவனத்தலைவர் செல்வக்குமார், தேவர் பேரவை காசிமாயத்தேவர், திருவரங்கம் கோயில் பராசர பத்ரிநாராயணபட்டர் ஆகியோரும் பேசினர். 

கூட்டத்தின் முடிவில் விசுவ இந்து பரிசத் மாவட்ட தலைவர் பத்மநாபன் நன்றி தெரிவித்தார்.