Asianet News TamilAsianet News Tamil

Foxconn plant Tamilnadu :நாளை முதல் ஃபாக்ஸ்கான் ஆலை திறப்பு.. தரமான உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய தனிக்குழு..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலையில் நாளை முதல் உற்பத்தி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Foxconn plant opening tomorrow
Author
Kancheepuram, First Published Jan 10, 2022, 5:55 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் இங்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் என சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். தொழிற்சாலையின் ஏற்பாட்டில், பல்வேறு இடங்களில் விடுதிகளில் தங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி கடந்த மாதம் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். பெண் தொழிலாளர்களும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  அரசு அதிகாரிகள் தரப்பில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் சூழ்நிலைகளை மேம்படுத்தித்தர வேண்டும். தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தித்தர வேண்டும். தேவையான இடவசதி, குளியல் அறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தர வேண்டும் என்றும் எடுத்துரைக்கபட்டுள்ளது.

பாக்ஸ்கான் நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தொழிற்சாலையில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் முன்பாக தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். ஊழியர்கள் பணிக்குத் திரும்பும்போது அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம். தொழிற்சாலையின் உள்ளூர் நிர்வாகக் குழு மற்றும் நிர்வாக அமைப்புகளை மறுசீரமைத்து உள்ளோம். இதனால் தேவையான உயர் தரங்களை அடையவும் பராமரிக்கவும் முடியும் என்பதை உறுதிப்படுத்தவதாகவும் கூறப்பட்டிருந்தது. தொழிற்சாலையில் பணிச்சூழல்,தொழிலாளர் நலன் உயர் தரத்தில் உள்ளதாக என்று உறுதிசெய்யப்படும் என ஆப்பிள் நிறுவனமும் கூறியுள்ளது.
 
இந்நிலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதற்கட்டமாக நாளை முதல் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக ஆலை இன்று திறக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் தொற்று இல்லாதவர்கள் மீண்டும் நாளை முதல் பணிக்குச் செல்வர். அதே போல நாளை 200 பேருக்கு தொற்று பரிசோதனை நடைபெற உள்ளது. இதனிடையே வருவாய்த் துறை சார்பாக விடுதிகளை கண்காணிப்பதற்கும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் சுத்தமான உணவு, ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios