Four villagers asked for water and held in strike ...

சிவகங்கை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தண்ணீர் கேட்டு நான்கு கிராம மக்கள் இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் வரிசையாக வெற்றுக் குடங்களை வைத்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே திருவள்ளூர், தட்டனூர், உதயனூர், காரைக்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் காவிரில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சமீப காலமாக இந்த கிராமங்களில் சரவர குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் என்ற நிலை மாறி, தற்போது பத்து நாள்களுக்கு ஒருமுறை என்ற அளவிற்கு மாறிவிட்டது. இதனால் திருவள்ளூர், உதயனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதியடைந்தனர்.

குடிநீர் கிடைக்காததால் பெண்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் எடுப்பதற்காக அதிக தொலைவு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். எனவே தங்கள் பகுதிகளில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இதுதொடர்பாக ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் வழக்கம்போல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர், உதயனூர், தட்டனூர், காரைக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காவிரிக் கூட்டுக் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று இளையான்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர், அவர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஒன்றிய ஆணையாளர்கள் ரகுவீரகணபதி, அழகுமீனாள், தாசில்தார் செந்திவேல் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது மாவட்ட விவசாய சங்கத் தலைவர் அழகர்சாமி, மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, ஒன்றியத் தலைவர் சந்தியாகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் கந்தசாமி ஆகியோர், “குடிநீர் சீராக விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், “குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர்.

இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டு, போராடியவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.