மதுரை  

திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் அரசின் நான்கு சாராயக் கடைகளை இருப்பதால் அதனை மூட வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் மக்களோடு சேர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அரசு பள்ளி, அரசு பொது மருத்துவமனை போன்றவை செயல்படுகின்ற நிலையில் அங்கு ஒரே இடத்தில் நான்கு அரசு சாராயக் கடைகள் இயங்கி வருகின்றன.

இதனால் அவ்வழியே செல்லும் அடியார்கள், பள்ளி மாணவ, மாணவியர், மக்கள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  எனவே அப்பகுதியில் உள்ள சாராயக் கடைகளை அகற்ற கேண்டும் என்று கடந்த மே மாதம் 15-ஆம் தேதி அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து 40 நாள்களில் சாராயக் கடைகள் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் 70 நாள்களுக்கும் மேலாகியும் சாராயக் கடைகள் அகற்றப்படாததால் அனைத்துக் கட்சியினர் சார்பில் சாராயக் கடைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைப்பெற்றது.

இதில் திமுக மாவட்டச் செயலர் கோ.தளபதி, பகுதிச் செயலர் கிருஷ்ணபாண்டி, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன், தாலுகா செயலர் ராஜூ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மகாமுனி, மதிமுக பகுதிச் செயலர் முருகேசன், தேமுதிக துணைச் செயலர் தனபாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

இதனையடுத்து கலால் பிரிவு வட்டாட்சியர் அன்பழகன், உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதில் சாராயக் கடைகளின் பார் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு கடைகள் அகற்றப்படும் எனவும் உறுதியளித்தனர்.

மேலும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை கடைகள் தாற்காலிகமாக மூடப்படும் என கூறியதன் பேரில் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.