திருப்பூர்

பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது திருப்பூர் அருகே கார் அதிபயங்கரமாக மரத்தில் மோதிய கவிழ்ந்ததில் சிறுமி உள்பட நால்வர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள பெரியசோரகை கஸ்பாகாட்டுவளசு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). இவர் ஒரு விவசாயி. இவருடைய மனைவி கோகுலப்பிரியா (29). இவர்களுக்கு பரிவிதா என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது.

வெங்கடேஷ், அவருடைய மனைவி கோகுலப்பிரியா, மகள் பரிவிதா ஆகியோருடன் ஒரு காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். இந்த காரில் தனது மாமனார் ரங்கநாதன் (54), மாமியார் ஜோதி (50), இவர்களுடைய மகள் சங்கீதா, சங்கீதாவின் மகள் ஜெனிதா (4) மற்றும் வெங்கடேஷின் தாயார் இலட்சுமி ஆகியோரையும் அழைத்து சென்றனர்.

இவர்கள் அனைவரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் அதே காரில் அனைவரும் சேலம் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை வெங்கடேஷ் ஓட்டிச் சென்றார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை கடந்து காங்கேயம் - சென்னிமலை நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் சாவடி அருகே நேற்று காலை 10.30 மணிக்கு கார் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, திடீரென வெங்கடேஷின் கட்டுப்பாட்டை இழந்த கார், வலது புறம் திரும்பி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பை கடந்து அடுத்த சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் அதிபயங்கரமாக மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கார் சுக்கு நூறாய் நொறுங்கி சின்னாபின்னமானது. காருக்குள் இருந்தவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி அலறினர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காங்கேயம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து காவலாளர்களை வரவழைத்தனர்.

அப்போது காருக்குள் ரங்கநாதன் மனைவி ஜோதி, வெங்கடேஷின் தாயார் இலட்சுமி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேஷ், கோகுலப்பிரியா, பரிவிதா, ரங்கநாதன், சங்கீதா, ஜெனிதா ஆகியோரை மீட்டு ஒரு அவசர ஊர்தியில் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஜெனிதா இறந்தாள்.

இதனையடுத்து மற்றவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரங்கநாதன் இறந்தார்.

இதனையடுத்து வெங்கடேஷ், கோகுலப்பிரியா, பரிவிதா, சங்கீதா ஆகிய நால்வரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையில் ஜோதி, இலட்சுமி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இவர்களின் உடல்களுடன் சிறுமி ஜெனிதா உடலும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரங்கநாதன் உடல் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து காங்கேயம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது கார் மரத்தில் மோதியதில் நால்வர் பலியான சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.