அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்கள் லஞ்சப் புகாரில் சிக்கிய நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 11 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ.கணபதி, பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் டி.சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும் வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜூம் கைது செய்யப்பட்டார்.

துணைவேந்தர் கணபதி கைது பிறகு அனைத்து பல்கலைகழகங்களின் ஊழல் வெளிவரத்தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் சென்னையிலும் 2 பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான ராஜாராம், தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான வணங்காமுடி ஆகிய இருவர் மீதும் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் வாங்கியதாக புகார்  எழுந்து வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இருவரும் பதவியில் இருந்த காலகட்டத்தில் அதில் தொடர்புடைய 11 பேரின் பட்டியலை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அண்ணா பல்கலைகழக பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களான ஜெயஸ்ரீ, கலாவதி, பாலமுருகன், மந்தாகினி, ஜெயலட்சுமி, அறிவானந்தம் ஆகியோர் இந்த முறைக்கேட்டில் சிக்கியுள்ளனர். 

துணை வேந்தராக இருந்த வணங்காமுடிக்கு உடந்தையாக இருந்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கே.எஸ்.ஷர்வானி, பாலாஜி, அசோக்குமார், ஜெய்சங்கர், ராஜேஷ் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தமிழ் பல்கலை கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலை கழகம் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.