பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு ஆதரவாக தமிழக அரசு பேரணி நடத்தியது. இதை விமர்சித்த செல்லூர் ராஜூவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செல்லூர் ராஜூக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்கள் : பஹல்காம் தாக்குதலையடுத்து இந்திய ராணும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. இதனை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பிரதமரைத்தான் பாராட்டணும், ராணுவ வீரர்கள் என்ன போர்ல சண்டையா போட்டாங்க என்று கூறியிருந்தார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பல இடங்களில் போராட்டத்தையும் நடத்தி வருகிறார்கள்.
ராணுவ வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜூ
இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 22 தேதியன்று பெஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஒட்டு மொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் என பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் நடத்தியதும் அனைவரும் அறிந்ததே.
போர் பதட்ட சூழலில் எள்ளளவும் பின் வாங்காமல் எல்லை பாதுகாப்பு படையின் வீரர் இம்தியாஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் முரளி நாயக் ஆகிய இருவரும் நாட்டின் பாதுகாப்பு பணியில் தங்களது இன்னுயிரை ஈகினர். அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை பதிவு செய்துகொள்கிறோம். இப்படியான ஒரு பதட்டமான சூழலில் தமிழ் நாடு அரசு முதல்வர் மு க ஸ்டாலின் ராணுவத்திற்கு துணை நிற்போம் என பேரணி ஒன்றை நடத்தியிருந்தார். அதனை விமர்சிக்கும் விதமாக ராணுவமா சண்டை போட்டது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திரு செல்லூர் ராஜ் பேசிய காணொளிகளை கண்டு அதிர்ச்சியானோம்.
செல்லூர் ராஜூக்கு எதிராக போராட்டம்- முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் எச்சரிக்கை
எல்லையில் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை .இந்தோ திபெத் பார்ட்ர் போலீஸ், சாஸ்த்ர சீமா பல் என துணை ராணுவப்படையினர் தங்கள் உயிரை கொடுத்து எல்லையில் நாட்டை காக்கும் நிலையில் செல்லூர் ராஜ் அவர்களின் பேச்சு இந்தியாவின் பாதுகாப்பில் நிற்கும் வீரர்களை தமது அரசியல் லாபத்துக்க்காக பயன்படுத்தும் விதமாகவும் ஏளனமாக சித்தரிக்கும் விதமாகவும் உள்ளது.
இந்த அபத்தமான பேச்சினை தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வுச் சங்கம் (TN CAPF WARA) வன்மையாக கண்டிக்கிறது. அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
