Foreign Professors teach English to Tamil students - sengottaiyan

ஈரோடு

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு தமிழக மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச கற்றுத்தரப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.1.69 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத் திறப்பு விழா, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.45 இலட்சம் செலவில் பார்வையாளர்கள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டுவிழா, குமரன்கரடு பகுதியில் ரூ.8.75 இலட்சம் செலவில் தார் சாலைக்கு பூமிபூஜை, 

தாண்டாம்பாளையத்தில் ரூ.35 இலட்சம் செலவில் பள்ளிக் கட்டடம் கட்ட பூமிபூஜை மற்றும் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா சத்தியமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. 

இதனை தமிழக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டங்களைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: "நடைபெற உள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வியத்தகு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. 

வரும் கல்வி ஆண்டில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 60 ஆயிரம் பேருக்கு ஆங்கிலம் பேச கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், ரூ.500 கோடி செலவில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளியிலேயே இணையதள சேவை துவங்கப்பட உள்ளது. 

தனியார் பள்ளிகளை விட கற்றலில் அரசுப் பள்ளி சிறந்து விளங்க பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. 

சத்தியமங்கலத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பும் கட்டித்தரப்படும்" என்று அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன், பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் கே.சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.