தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை மீறி, நெடுவாசல் மற்றும் காரைக்கால் உள்பட நாட்டின் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு நேற்று கையெழுத்திட்டது. இதனால், தமிழகத்தில் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில், பூமிக்கு அடியில் ஹைட்ரோகார்பன் எடுக்க கர்நாடகாவின் ‘ஜெம்  நிறுவனத்துக்கும், காரைக்காலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ‘பாரத் ரிசோர்ஸ்’ நிறுவனத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதனால் விளை நிலங்கள் பாழாகும் என்பதால், நெடுவாசலில் போராட்டம் வெடித்தது. 20 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த போராட்டம், மத்திய- மாநில அரசுகளின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப்பின் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், நெடுவாசல் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், டெல்லியில் நேற்று கையெழுத்தானது.

அனைத்து ஒப்பந்தங்களிலும் பெட்ரோலியத்துறை சார்பில் உயர் அதிகாரி ராஜேஷ் மிஸ்ரா கையெழுத்திட்டார்.

மத்திய அரசு உறுதி அளித்திருந்த நிலையில், நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதால் நெடுவாசல் மற்றும் வடகாடு கிராம மக்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் போராட்டம் வெடிக்கும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.