இராமநாதபுரம்

இராமேசுவரத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மீனவ மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் பகுதியில் உள்ளன கரையூர், தெற்கு கரையூர், சேரான் கோட்டை. இந்த பகுதிகளை சேர்ந்த கடற்கரையை ஒட்டி அரசு புறம்போக்கு இடம் இருக்கிறது.

இந்த இடத்தில் 1500–க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் அவர்களுக்கு மின்சார வசதி உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் பெற முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதி மீனவ மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட வலியுறுத்தி நேற்று பேருந்து நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்களும், மீனவ பெண்களும் கூட்டம் கூட்டமாக பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு மீனவ பெண்கள், மீனவர்கள் அனைவரும் வீட்டு மனை பட்டா வழங்க கோரி பேருந்து நிலையத்தில் இருந்து அனைவரும் ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்றனர். அவர்கள் தாசில்தார் ரமேஷை சந்தித்து மனுவை கொடுத்து விட்டு திரும்பினர்.