தேவகோட்டை
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் பெரும்பாலான இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஏ.டி.எம்கள் டல் அடித்தது.
பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்றும், அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும், மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை வருகிற டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்களும், வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே பெரும் சுனாமியே ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டத்திலும் இந்த அறிவிப்பால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த துயரத்திற்கு ஆளாகினர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து காரைக்குடி, சிங்கம்புணரி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களிலும் நள்ளிரவு கூட்டம் அலைமோதியது. ஆனால், ஒரு பயனும் இல்லை. மக்களுக்கு பணம் கிடைக்கவில்லை.
இரவுச் சாப்பிடாமல் பட்டினியாக படுத்தவர்களும் இருப்பர்.
திருட்டுப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்தவே இந்த முயற்சி என்று பிரதமர் மோடி கொக்கரத்தாலும் இதன் தாக்கம் என்னவோ பொதுமக்களை தான் ஓங்கி அடித்தது.
இரண்டு நாள்கள் ஏ.டி.எம். மையங்கள் மூடி கிடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால், நேற்றும், இன்றும் காரைக்குடி பகுதியில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களும் மூடியே கிடந்தன.
இதேபோல் தேவகோட்டை பகுதியில் வணிக நிறுவனங்களில் சில்லரை வர்த்தகம் மட்டும் நடைபெற்றது. அங்குள்ள ஓட்டல்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதால் சாப்பிட முடியாமல் பலர் தவித்தனர். குறிப்பாக ராமேசுவரம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த திடீர் அறிவிப்பால் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் வெறுமையாகவே இருந்தது.
பெட்ரோல் பங்க்களில் 500, 1000 நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர்.
மேலும் மொத்தமாக ரூ.500, ரூ.1000–க்கு வேண்டுமானால் பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள் ஆனால் சில்லரை மட்டும் இல்லை தெரிவித்தனர்.
மொத்த டேங்கு நிரப்பினாலும் 300 ரூபாயில் நிரப்பி விடலாம். அப்போ மீதி பணம்? இதனால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றால், அரசிற்கு வருமானத்தை ஈட்டும் கல்லா கட்டுற டாஸ்மாக் கடைகளிலும் இதே பிரச்சனை தான்.
நேற்று முன்தினம் விற்கப்பட்ட பணத்தை நேற்று வங்கிகளில் கட்ட வேண்டும். ஆனால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் அந்த பணம் எவ்வளவு என்கிற விவரத்தை டாஸ்மாக் நிறுவனம் கேட்டு பெற்றததோடு, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால், மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் மிகவும் மந்த நிலையிலேயே இருந்தது. ஏனெனில், அவர்களும் 500 ரூபாயை வாங்கவில்லை.
