தொடர் மழை காரணமாக விளைச்சல் குறைந்ததால் மதுரை மல்லிகைப்பூவின் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டு கிலோ ரூ.4000 வரை விற்பனை செய்யப்படுகிறது, நாளை முகூர்த்த தினம் என்பதால் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்குப் பருவமழையொட்டி தமிழகமெங்கும் வழக்கத்தைவிடப் பலமடங்கு கூடுதலாக மழை பெய்தது.தொடர் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தன. மேலும் கொட்டி தீர்த்த மழையினால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் புகுந்து, பயிர்கள் சேதமாகின. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி, பெரும் சேதம் ஏற்பட்டது. இதனிடையே வயல்வெளிகளையும் தோட்டப் பயிர்களையும் வெள்ளம் மூழ்கடித்த நிலையில் விவசாயம் பெரிதளவு பாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்ததால் சந்தைகளுக்கு முன்பை விட மிக குறைந்த அளவிலே காய்கறி லாரிகள் வந்தன. இதனால் தமிழகமெங்கும் பரவலாக அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தன. குறிப்பாக தக்காளி விலை கிலோவிற்கு ரூ100 முதல் ரூ.170 வரை விற்பனையானது. விலை உயர்வை கட்டுபடுத்த தமிழக அரசு சார்பில் கூட்டுறவு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் நகர்புற மற்றும் அதனை சுற்றியுள்ள குறிபிட்ட ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மதுரையின் தனித்தன்மையாகக் கருதப்படும் மதுரை மல்லிக்கைப்பூவின் விலை கடுமையான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாகவே மழை பாதிப்பு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதாகவும் சந்தைகளுக்கு பூக்களின் வருகைக் குறைவால் இந்த ஆண்டு பூக்களின் விலை அதிகமாக உள்ளதாகவும் வியாபரிகள் தெரிவிக்கின்றனர். முகூர்த்த நாட்களில் கூட அதிகபட்சமாக கிலோ மல்லிகைப்பூ ரூ.2500 யை தாண்டாத நிலையில் தற்போது ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நேற்று வரை கிலோ மல்லி ரூ. 2,500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ. 1,500 உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் இன்று மதுரை மலர்ச் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூ.4000 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளை முகூர்த்த தினம் என்பதால் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர் மழை, விளைச்சல் குறைவு, வரத்துக் குறைவால் வரலாறு காணாத அளவிற்கு இந்த ஆண்டு மிகப்பெரிய விலை ஏற்றத்தைக் கொடுத்துள்ளது என்று விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர். மல்லிகைப் பூ மட்டுமில்லாமல் அனைத்துவிதமான பூக்களின் விலையும் சற்று கணிசமாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையிலும் மல்லிக்கைப்பூவின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ விலை அதிகமாக, கிலோவிற்கு ரூ.3,500 க்கு விற்கப்பட்டது. குமரி மாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் தோவாளைக்கு வந்து பூக்களை வாங்கி சென்றனர்.
