சிதம்பரம் வட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளாக 71 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நகர்மன்றக் கூடத்தில் மழை, வெள்ளம் மற்றும் புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்தார்.
அப்போது, “சிதம்பரம் வட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளாக 71 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிதம்பரம் நகரில் 33 வார்டுகளுக்கும் மழை, வெள்ள பாதிப்பு குறித்து கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதிப்புகளை உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்படும் பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட முகாம்களில் மின்சாரம், குடிநீர் வசதி, உணவு வசதி செய்துதர வேண்டும். அதற்காக அரிசி, காய்கறிகள் உணவுப் பொருள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பெண்களுக்கான பாதுகாப்புப் பணியில் பெண் காவலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். நிவாரண உதவிகள் வழங்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவரது மேற்பார்வையில் உதவிகள் வழங்கப்படும்.
முதலைகள், பாம்புகளை பிடிக்க வனத் துறை சார்பில் 10 பேர் கொண்ட குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தூர்வாரப்படாத நீர்நிலைகளை கண்டறித்து பொதுப்பணித் துறையினர் உடனடியாக தூர்வார அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று ஆட்சியர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, நெடுஞ்சாலைத் துறை மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன், கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, சிதம்பரம் நகராட்சி தனி அதிகாரி ஜெகதீசன், வட்டாட்சியர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
