நீலகிரி

கல்லட்டி மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த பாறையில் பயங்கரமாக மோதியது. இதில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார். ஏழு பேர் பலத்த காயம்  அடைந்தனர்.

கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர் வினாயக் (43). இவர் தனது மனைவி சந்தியா (33), சகோதரி சபித்தா (30), அவரது கணவர் நவீன் (38) குழந்தைகள் ஆதித்யா (2), நிசலோ (8), சம்மன்வீ (6), அவினி (5) ஆகியோருடன் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தார். 

அவர்கள் ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று காரில் கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூருக்கு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தனர். காரை வினாயக் ஓட்டினார்.

கல்லட்டி மலைபாதையில் 23-வது கொண்டை ஊசி வளைவை கடந்து கார் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில், தறிக்கெட்டு தாறுமாறாக ஓடி கார், சாலையோரத்தில் இருந்த பாறையில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் வந்த எட்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி அவினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

மற்ற 7 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர், அவர்கள் ஏழு பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து புதுமந்து காவலாளார்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.