MK Stalin : சேலம் கேஸ் சிலிண்டர் விபத்து ; நிவாரண நிதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சேலம் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிலிண்டர் வாயு கசிந்ததின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சேலம் மாநகராட்சி 57வது கோட்டத்திற்குட்பட்ட பாண்டுரங்கன் தெருவில் உள்ள நான்கு வீடுகள் நேற்று தரைமட்டமாகின. இதில் குடியிருந்து வந்த மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் முதலில் உயிரிழந்தார். இதனையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 13 பேரை அடுத்தடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ராஜலட்சுமியின் மருமகன் கோபி, 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 7 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த பத்மநாபன் மற்றும் அவருடைய மனைவி தேவியின் உடல்களை மீட்டனர்.
அதனை தொடர்ந்து கார்த்திக் ராம் என்ற இளைஞரின் உடலை மீட்டனர். பின்னர் ராஜலட்சுமியின் வீட்டில் தங்கியிருந்த அவருடைய நாத்தனார் எல்லம்மாள் உடலை மீட்டனர். இதனால் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிலிண்டர் வெடித்து விபத்து உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.