இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறை பிடித்து சென்றனர்.

அவர்களுக்கு ஏப்ரல் 12 வரை சிறை காவல் அளித்து ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஏற்கனவே சிறைபிடிக்கபட்டுள்ள 26 மீனவர்களையும் தற்போது சிறைபிடிக்கபட்டுள்ள 12 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 38 பேரை மீட்க நடவடிக்கை தேவை எனவும், 133 படகுகளையும் இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாக் ஜலஜந்தி பகுதியில் மீனவர்களின் சமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்த 1650 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.