ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர்.

ராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலை 500க்கு மேற்பட்ட படகுகளில் 2000க்கு மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது, 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், சரமாரியாக கற்கள் மற்றும் பட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

பின்னர், மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்த இலங்கை கடற்படையினர், அவற்றை கடலில் வீசினர்.

பின்னர், ஆரோக்கியகுரூஸ் என்ற மீனவரின் படகு மீது, இலங்கை ரோந்து படையினரின் படகை வைத்து மோதினர். இதில் மீனவரின் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதனால், படகில் இருந்த 5 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதை பார்த்த சக மீனவர்கள், அவர்களை மீட்டு கரை சேர்த்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், மேலும் 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்துள்ளார். இந்த வேளையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.