சேலம்

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து நாளை முதல் தொடங்கவுள்ள சேலம் - சென்னை விமான சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சேலம் - சென்னை இடையே ‘ட்ரூஜெட்‘ விமான நிறுவனம் நாளை முதல் விமான சேவையை தொடங்க உள்ளது. மத்திய அரசின் ‘உதான்‘ திட்டத்தின்கீழ் இந்த விமான போக்குவரத்து தொடங்குகிறது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.40 மணிக்கு சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வந்தடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

இந்த விமான சேவையை மத்திய விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 

அதன்படி, சென்னையில் இருந்து நாளை காலை 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு விமானம் காலை 9.20 மணிக்கு சேலம் வந்தடைகிறார்.  இந்த விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சபாநாயகர் தனபால், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் வருகிறார்கள்.

பின்னர், சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் பயணிகள் விமானம் காலை 10.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பயணிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. 

பின்னர் காலை 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை புறப்படும் விமானம் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். சென்னையில் இருந்து இதே விமானம் கடப்பா வழியாக ஐதராபாத் புறப்பட்டு செல்கிறது.

காமலாபுரம் விமான நிலையத்தில் இந்த தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை இரண்டாவது முறையாக நேற்று மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் சேலம் மாவட்ட சிறு, குறு தொழிற்சங்க தலைவர் என்ஜினீயர் மாரியப்பன் மற்றும் டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை காமலாபுரம் விமான நிலையத்தில் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.  முதலமைச்சர் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.