பரமக்குடி தெற்கு பள்ளிவாசல் சாலையில் கழிவுநீரை வெளியேற்ற வழிசெய்துவிட்டு சாலை அமையுங்கள் என்று அப்பகுதி மக்கள் சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பரமக்குடி நகராட்சி 36-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியில் தெற்கு பள்ளிவாசல் அமைந்துள்ளது. திருவரங்கம் சாலையிலிருந்து இப்பள்ளி வாசலுக்குச் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் மோசமாக இருக்கிறது.

சாலையின் இருபுறமும் உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலையின் குறுக்காக செல்லும் கழிவுநீரை வெளியேற்றும் கால்வாய் மிகவும் சேதமடைந்து கெட்டவாடை அடித்துக் கொண்டிருக்கிறது.

விரிவாக்கப் பகுதியான அப்பகுதியில் உள்ள இந்த 20 அடிச் சாலையை மையமாக வைத்து ஏராளமான அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு கட்டப்படும் வீடுகள் சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்புச் செய்து விடுவதால், 20 அடி அகலமுள்ள சாலை 10 அடி அளவில் சுருக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கழிவுநீர் வெளியேறும் வழிகளிலும் சாலை அமைக்கப்படுகிறது.

கழிவுநீர் வெளியேற வழியின்றி இந்த சாலை அமைக்கப்படுவதால் இந்த பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கழிவுநீர் வெளியேற வழிசெய்த பின்னரே, சாலை அமைக்க வேண்டும் என்று கூறி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.

“இந்தப் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி 20 அடியில் சாலை அமைத்திடவும், கழிவுநீரை வெளியேற்ற வாறுகால் அமைக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.