காஞ்சிபுரத்தில் தீபாவளி பண்டுக்காக வாங்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு வைக்கப்பட்டிருந்த வீடு முற்றிலும் சேதமாகியது. காஞ்சிபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரு வீட்டில், தீபாவளி பண்டுக்காக ஏராளமான பட்டாசு பண்டல்கள் வாங்கி வைத்திருந்தனர். 

இந்த நிலையில் அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசில் எதிர்பாராத விதமாக தீ பற்றியுள்ளது. இந்த தீ விபத்தில் சமையல் அறையில் இருந்த எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியுள்ளது. இதில் அந்த வீடு முற்றிலும் சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து, தீயணைப்பு துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தீயைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் கருகி உயிரிழந்தனர். சாகீரா பானு, முஸ்தா, மஸ்தான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவரின் உடலை மீட்க போராடி வருகின்றனர். இந்த வீட்டில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.