விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஒரு முக்கிய தொழில் நகரமாகும், இது இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90% பங்களிக்கிறது. இங்கு பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி உற்பத்தி, மற்றும் அச்சிடுதல் ஆகிய மூன்று முக்கிய தொழில்கள் உள்ளன. சிவகாசியில் 1960களில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, தற்போது 2500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை நேரடி மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபடுகின்றன. இங்கு அவ்வப்போது வெடி விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளன. அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் ஓய்ந்தபாடியில்லை.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள விஜயகரிசல் குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது, வெடி மருந்துகள் திடீரென வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. அது மளமளவென பரவி பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.