சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரயிலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பயணிகள் வழக்கம்போல் சென்று வந்து கொண்டிருந்தனர். அப்போது 10 வது நடைமேடையில் விபத்துக்கால மீட்பு பணிக்கு செல்லும் ரயில் பெட்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ரயில் விபத்தின்போது, விபத்துக்கால மீட்பு ரயில் பெட்டி சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும். அந்த வகையிலான இந்த ரயில் பெட்டி, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்று மதியம் சுமார் 3.15 மணியளவில் இந்த பெட்டி மீது, மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. ரயிலின் மேல் செல்லும் மின் கம்பி வழியாக 25000 வோல்ட் மின்சாரம் கடத்தப்படும். இந்த மின் கம்பி, 10-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி மீது விழுந்ததால், அந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர், ரயில் பெட்டியினுள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் அரைமணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்து காரணமாக பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்றும், ரயில்சேவை ஏதும் பாதிக்கப்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளன. 10-வது நடைமேடை என்பது, பயணிகள் ரயில் செல்லாத பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.