FIR filed agaisnt republic tv reporter
போயஸ் கார்டனில் நேற்று நடந்த தகராறின் காரணமாக அர்னாபின் ரிபப்ளிக் டிவி செய்தியாளர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று காலை போயஸ் கார்டன் சென்றார். இதை அறிந்ததும், ஏராளமான பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார், அனுமதிக்க மறுத்து, தடுத்து நிறுத்தினர்.
அப்போது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியே வந்த தீபா, அங்கு தன்னை சிலர் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், தன்னை தனது தம்பி தீபக், போன் செய்து அழைத்ததாகவும், ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்தும்படி கூறியதால், போயஸ் கார்டன் சென்றதாகவும் கூறினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்தது.
போயஸ் கார்டன் வீட்டில் இருந்தபோது, தன்னுடன் சென்ற தனியார் தொலைக்காட்சியான ‘ரிபப்ளிக் டிவி’ செய்தியாளர்கள் 2 பேரை, அங்கிருந்த பாதுகாவலர்கள் தாக்கியதாகவும், அவர்களது கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறினார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சஞ்சீவ் மற்றும் ராகவன் ஆகியோர் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், செய்தியாளர் சஞ்சீவ் கொடுத்த புகாரின்பேரில், போயஸ் கார்டன் பாதுகாவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் தாக்கப்பட்ட சம்பவமும், அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
