திருநெல்வேலி

அரியலூர் மாணவி அனிதா சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருநெல்வேலியில் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தின.

நீட் தேர்வால், மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருநெல்வேலி மாநகரில் 3-வது நாளாக நேற்றும் போராட்டங்கள் நடைபெற்றன.

பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி எதிரே நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைப்பெற்றது.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குயிலி நாச்சியார் தலைமையில் பெண்கள் இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

அதேபோன்று பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கி முன்பாக மார்க்சிஸ்ட கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

அக்கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மறியல் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில், வண்ணார்பேட்டையில் அனிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாவட்டச் செயலர் அப்துல் வகாப் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வுக்கு விலக்கு பெற தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், விலக்கு அளிக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

திருநெல்வேலி திருபுரத்தில் உள்ள தபால் நிலையத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கபாண்டியன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாநகரில் நேற்று மூன்று இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் ஆண்கள், பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.