அனைத்து வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பொட்டாஷ் உரம் இனி ஒரிரு நாட்களில் தட்டுபாடின்றி கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் 4,356 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாய பெருமக்களுக்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. டிசம்பர் முழுவதற்குமான தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பொட்டாஷ் உரத் தேவை 14,900 மெட்ரின் டன் என்று குறிப்பிடப்படுள்ளது. தற்போது, பொட்டாஷ் உரம் 4,945 மெட்ரிக் டன் அளவிற்கு தொடக்க 6 வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஐபிஎல் நிறுவன பொட்டாஷ் உரம், 36,500 மெ.டன் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி அன்று பெறப்பட்டுள்ளதாகவும் தற்போது தேவைப்படும் 14,900 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரம் தூத்துக்குடி துறைமுகத்தில் ரயில் மற்றும் லாரி மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மொசைக் நிறுவனத்தின் டிசம்பர் மாதத்திற்கான ஒதுக்கீடாக 3000 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரத்தில், 1,275 மெட்ரிக் டன் உரம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து திருச்சி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரயில் மூலம் நகர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாஷ் உரம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தடைந்த உரங்களில் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொட்டாஷ் உரத்தின் விலை ரூ1040-ஆக விற்கப்பட்ட நிலையில் ரூ1700-ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இந்த விலை ஏற்றம் புதிதாக வந்துள்ள உரத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே இருப்பில் உள்ள உரங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இருப்பில் உள்ள உரங்ள் பழைய விலைக்கே விற்பனை செய்வதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு கன்காணிப்பு குழு அமைக்கப்பட்டள்ளது.
