தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏதாவது நேர்ந்தால் அதற்கு திமுகவினர் தான் காரணம் என பெண் ஊராட்சிமன்ற தலைவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏதாவது நேர்ந்தால் அதற்கு திமுகவினர் தான் காரணம் என பெண் ஊராட்சிமன்ற தலைவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் ஊராட்சியில் சுமார் 4500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயிரிடப்பட்டு வருகின்றது. இந்த கிராமத்தை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அதிக வருமானம் உள்ள ஊராட்சியாக மாகறல் கருதப்படுகிறது. மாகறல் ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 1150 க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றார்கள். இந்த மாகறல் ஊரட்சியின் தலைவராக பட்டதாரி பெண் மேத்தா ஞானவேல் என்பவர் செயல்பட்டு வருகின்றார். மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் தலைவர் பதவிக்கு வந்தவர் தற்போது மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிற அனைத்து பணிகளிலும் திமுக கட்சியை சேர்ந்த தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வீரராகவன் என்பவர் தலையிட்டு மிகுந்த இடைஞ்சல் செய்து வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் என்பவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மேத்தாஞானவேல் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஜெயராமன், அன்பு செல்வன் என்ற இரண்டு பட்டதாரி இளைஞர்களை புதிய பணித்தள பொறுப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் மேத்தா ஞானவேல் தேர்ந்தெடுத்தார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத வீரராகவன், ஊராட்சி மன்ற தலைவர் மேத்தா ஞானவேலுக்கு எதிராக தனது உடன் பிறந்த தம்பி பிரபு மற்றும் பவானி என்பவரையும் நியமித்து, திமுக கட்சியை சேர்ந்த நபர்களுக்கு மட்டும் 100 நாள் வேலை செய்ய அனுமதிப்பதால் மற்ற பயனாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுமார் 70க்கும் மேற்பட்ட பயனாளிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேத்தா ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையில் எந்த ஒரு பணிகளையும் செய்யவிடாமல் திமுகவின் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வீரராகவன் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் சேவை செய்ய இவர் பெரும் தடையாக இருந்து வருகின்றார். இந்தப் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே நான் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் அவர்களிடம் நான் புகார் மனு அளித்தப்போது, அவர் என்னை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்கின்றார். ஒரு அரசு அதிகாரி இப்படி நடந்து கொள்வது முறையா? அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தில் தொடர்பே இல்லாத திமுக கட்சியை சேர்ந்த ஒரு தனிப்பட்ட நபர் 25க்கும் மேற்பட்ட பயனாளிகளை அழைத்துச் சென்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வாங்கியது ஊராட்சி சட்ட விதிகளின் படி சட்டப்படி குற்றம். எனவே சுரேஷ் என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவினர் எனக்கு அதிகமான டார்ச்சர் அளிப்பதால் எனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகின்றது. எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏதாவது நேர்ந்தால் அதற்கு திமுகவினர் தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும் திமுகவினர் அளித்து வரும் டார்ச்சரை தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாகறல் காவல் நிலையத்தில் மேத்தா ஞானவேல் புகார் மனு அளித்துள்ளார்.